கண் பாதுகாப்பினை உறுதிசெய்து, விழிப்புணர்வுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்
கண் பாதுகாப்பினை உறுதிசெய்து, விழிப்புணர்வுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் திருநெல்வேலி, நவ: 04 'தீபாவளி' என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். இந்த திருநாளன்று மக்கள் தீபங்கள் ஏற்றியும், வீடுகளை அலங்கரித்தும், இனிப்புகளைப் பகிர்ந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது நமது கலாச்சார மரபு. நண்பர்களையும் உறவினர்களையும் ஒன்றிணைக்கும் இப்பண்டிகையின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கு இடையே பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்கள் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை. இந்த பண்டிகைக் காலத்தில் ஏற்படும் பெரும்பாலான பட்டாசு விபத்துகள் நேரடியாக கண்களைப் பாதித்து, கடுமையான காயங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். ஆண்டுக்கு ஆண்டு, பட்டாசுகளால் ஏற்படும் கண் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர், பேராசிரியர். டாக்டர். லயனல் ராஜ். டி கூறுகையில், "பட்டாசுகளால் ஏற்படும் கண் காயங்கள், ஆரம்பத்தில் தோன்றுவதைவிட மிகவும் தீவிரமானவையாக இருக்கலாம். வெளிப்புறக் காயம் சிறியதாகத் தோன்றினாலும், அதன் பாதிப்பு கண்ணின் உள் அமைப்புகளையும் பாதித்து, பார்வைக்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும். சிகிச்சையைத் தாமதப்படுத்துவதோ அல்லது வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முயற்சிப்பதோ குணமடைவதில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். பட்டாசு விபத்தால் கண்ணில் காயம் ஏற்பட்டால் கண்ணில் அழுத்தம் கொடுப்பதையோ, கண்ணைத் தேய்ப்பதையோ அல்லது கண்ணில் சிக்கியுள்ள துகள்களைத் தாங்களாகவே அகற்ற முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும். உடனடியாகக் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பட்டாசுகளை கையாண்ட பிறகு, கைகளைக் கழுவாமல் கண்களை தொடக் கூடாது.கண்களில் விழுந்த துகள்கள் அல்லது அந்நியப் பொருட்களை நீக்க நீங்களாகவே முயற்சிக்கக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் களிம்புகள், கண் சொட்டு மருந்துகள் அல்லது வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தக் கூடாது. கண்ணுக்குள் ஏதேனும் ஆழமாக ஊடுருவியிருப்பதாக சந்தேகித்தால் கண்ணைக் கழுவவோ அல்லது அழுத்தவோ கூடாது. எந்த அழுத்தமும் கொடுக்காமல் ஒரு திடமான கவசம் கொண்டு கண்களை மூடி பாதுகாத்து, உடனடியாக அவசர சிகிச்சையை நாடவும்.காயம் சிறியதாக தோன்றினாலும் அல்லது பார்வை தெளிவாக இருப்பதாக தோன்றினாலும் கூட, மருத்துவ உதவியை நாட பொதுமக்கள் ஒருபோதும் தாமதிக்கக் கூடாது. பட்டாசு விபத்துக்குப் பிறகு வலி, கண் சிவத்தல், மங்கலான பார்வை, கூச்சம் அல்லது தொடர்ந்து கண்ணீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும். எதிர்பாராத விதமாக கண்ணில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் பொதுமக்களின் உதவிக்காக அவசரநிலை சேவைகளை வழங்க டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை எப்போதும் தயார் நிலையில் இருக்கிறோம். தயவுசெய்து தொடர்புகொள்க: 95949 24048. இந்த தீபாவளியை பாதுகாப்பான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான திருநாளாகக் கொண்டாடி மகிழ்வோம்!