தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு.
மதுரை அக் :12
தமிழக மக்கள் பெரிதும் விரும்பி உபயோகிக்கும் சன்ன ரக அரிசியின் நெல் தேவைக்கு, நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் கர்நாடகாவை நம்பியே நாம் இருக்கிறோம்.
இந்த ஆண்டு எல் நினோ பருவநிலை காரணமாக, நம் நாட்டில், தென் மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழையானது 30% சதவிகிதம் அளவுக்கு குறைவாக பெய்துள்ளதாக, வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனால், அனைத்து அணைகளிலும் பாதியளவு கூட அணைகள் நிறையவில்லை. அதனால், காவிரி டெல்டாவில் மட்டுமே, குறுவை சாகுபடியில், எப்போதும் பயிரிடும் சுமார் 4.57 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்குப் பதிலாக சுமார் 3.38 லட்சம் ஏக்கர்கள் மட்டுமே, நமது விவசாயிகளால் பயிரிட முடிந்தது. அதேபோல் தமிழகத்தில் மட்டுமில்லாமல் நமது அண்டை மாநிலங்களிலும் நெல் பயிரிடும் அளவுகள் குறைந்து, நெல் வரத்தும் மிகக்குறைவாக இருந்தது.
நாம் சன்னரகத் தேவைக்கு மற்ற மாநிலங்களையே சார்ந்திருப்பதால் இந்த ஆண்டு தேவைக்கு நெல் கிடைக்காமல் விலைவாசி உயர்ந்து வருகிறது. ரைஸ் மில்லர்கள் தங்களிடமிருந்த (பழசுப்படுத்திக் கொடுப்பதற்காக இருப்பு வைத்திருந்த) நெல் இருப்பினால் நமது உணவுத்தேவைக்கு அரிசி தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது.
மேலும்தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத் தேவைக்கான இருப்பும் மிக நல்லநிலையில் உள்ளதால், நமது அரிசித் தேவைக்குதொடர்ந்து அரிசி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பற்றாக்குறையானது, வரும் சம்பாசாகுபடியின் அறுவடைக் காலமான தை மாதத்தில் சகஜ நிலைக்கு வந்துவிட அதிக வாய்ப்புள்ளது.
சில ஊடகங்களில் வருவது போல் அரிசிக்குத் தட்டுப்பாடு என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அரிசி விலைவாசி உயர்ந்துள்ளதே தவிர எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. மத்திய மாநில அரசின் கிட்டங்கிகளிலும் தேவைக்கு அரிசி இருப்புகள் உள்ளன என்பதை பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைவர் தினேஷ் சிங், செயலாளர் ராஜேந்திரன் , பொருளாலர் சிவலிங்கராஜா கலந்து கொண்டனர்.