திருவண்ணாமலை கானலாபாடி ஸ்ரீசற்குரு ஞானதேசிக சுவாமிகள் 104-வது ஆண்டு குருபூஜை விழா
திருவண்ணாமலை கானலாபாடி
ஸ்ரீசற்குரு ஞானதேசிக சுவாமிகள்
104-வது ஆண்டு குருபூஜை விழா
திருவண்ணாமலை அக்.12-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள கானலாபாடி கிராமத்தில் வாழ்ந்து முக்தியடைந்தவர்
சற்குரு ஞானதேசிக சுவாமிகள். தம்மை நாடி வரும் பக்தர்களின் மனத்துயரங்களை நீக்குபவராகவும், பிணிகளைத் தீர்க்கும் அருள்வளம் மிக்கவராகவும் திகழ்ந்தார்.
கானலாபாடி கிராமத்தில் இவருக்குத் தனி ஆலயமும், அதில் அவரது திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டு வழிபாட்டு நடைபெற்று வருகிறது.
இக்கிராம மக்கள் தங்களின் சுபகாரியங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இந்த குருநாதரின் ஆலயத்திற்குச் சென்று அனுமதி பெற்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இவரது குருபூஜை விழா கானலாபாடியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 104-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. காலையில் கோ பூஜை, கலச பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஞானதேசிக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பிறகு சாதுக்கள் மகேஸ்வர பூஜை நடந்தது. அதன் பிறகு பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதில் சென்னை, புதுவை, காரைக்கால், பெங்களூரு மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்தும், சுற்று வட்டாரங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் சி.கே. கதிரவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ல ஸ்ரீ சற்குரு ஞானதேசிகர் சுவாமிகள் மடாலயம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏ.சிவராமன் மற்றும் கானலாபாடி, நாலாங்கட்டளை, காரைக்கால் அக்கரைவட்டம் விழாக்குழுவினர், அன்னதான கமிட்டியினர், பக்தர்கள் செய்திருந்தனர்.