Loading...

திற்பரப்பு அருவி ரூ.4.30 கோடியில் மேம்பாடு! சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் – பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

A

Admin

November 06, 2026 • 03:58 PM

திற்பரப்பு அருவி ரூ.4.30 கோடியில் மேம்பாடு! சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் – பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திற்பரப்பு அருவி ரூ.4.30 கோடியில் மேம்பாடு!
சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் – பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

குமரி நவ 07
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பின்படி, திற்பரப்பு அருவிப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவிக்கு தினமும் சுமார் 3,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள இந்த அருவியில், சுற்றுலாப் பயணிகள் நீராடுவதுடன், சிறுவர்களுக்கான பூங்கா மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இயற்கை எழில் சூழ்ந்த இந்தச் சுற்றுலாத் தலத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆய்வின்
போது, நடைபெற்று வரும் பணிகளைச் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில், அடுத்த சுற்றுலாப் பருவம் தொடங்குவதற்கு முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், பல்நோக்கு வளாகம், பெண்களுக்கான உடை மாற்றும் அறைகள், பூங்கா மேம்பாடு உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். அருவிக்குச் செல்லும் வழியிலும், அருவிப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திற்பரப்பு பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்ட தேர்வுநிலைப் பேரூராட்சியாகும். சுமார் 25,096 மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சுற்றுலாத்துறை சார்ந்த மேம்பாட்டுப் பணிகள் உள்ளூர் பொருளாதாரத்துக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

இந்த ஆய்வின்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் து. காமராஜ், இளநிலை மாவட்ட சுற்றுலா அலுவலர் வெள்ளைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நக்கீரன், பேரூராட்சி செயல் அலுவலர் இரா. ஜோஸ்லின்ராஜ், பேரூராட்சித் தலைவர் பொன். ரவி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவிச் செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -