தேனியில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 17 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு!
தேனியில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 17 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு!
அக் 01
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரர்கள், அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் இராணுவப் பணியின்போது உயிர்நீத்த படைவீரர்களின் மனைவிக்கு கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 17 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாகப் பெற்றுக்கொண்டார். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக வழங்கி, அவற்றின் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், "மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து தொழிற்பயிற்சியுடன் கூடிய வங்கிக் கடனுதவிகளை வழங்கி வருகின்றன. தொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த தகவல்களைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்து, அவர்களைப் பங்கேற்கச் செய்து வேலைவாய்ப்பினைப் பெறச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் தினேஷ், முன்னாள் படைவீரர் நலன் மருத்துவமனை உதவி இயக்குநர் விங் கமாண்டர் கிருஷ்ணசாமி, உபதலைவர் கர்னல் ராஜேந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.