தேனி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் பள்ளி செல்வதற்காகப் பேருந்து சேவை தொடக்கம்!
தேனி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் பள்ளி செல்வதற்காகப் பேருந்து சேவை தொடக்கம்!
அக் 10
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், விளையாட்டு விடுதியில் தங்கிப்பயிலும் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்வதற்கு ஏதுவாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மொத்தம் 81 பள்ளி மாணவர்களில் 24 மாணவர்கள் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 57 மாணவர்கள் தேனி-அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் பயின்று வருகின்றனர்.
விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி பள்ளிக்குச் சென்று வருவதற்கு ஏதுவாகவும், அவர்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்யும் வகையிலும் இப்பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து சேவை காலை 08.30 மணிக்கு விளையாட்டு விடுதியிலிருந்து பள்ளிக்கும், மாலை 04.30 மணிக்கு பள்ளியிலிருந்து விளையாட்டு விடுதிக்கும் இயக்கப்படும்.
இதன்மூலம் விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதுடன், தங்களது விளையாட்டுப் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை ஏற்படும். மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறன் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை, அவர்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்வதோடு, அன்றாடப் பயணத்தையும் எளிதாக்கும்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் துணை மேலாளர் ஜெகதீசன், கிளை மேலாளர் பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.