பள்ளியிலிருந்து மகள்களை அழைத்து வந்த பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு
பள்ளியிலிருந்து மகள்களை அழைத்து வந்த பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு
திரு நெல்வேலி நவ 7
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே துணிகரம்: பள்ளியிலிருந்து மகள்களை அழைத்துச் சென்ற பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே, பள்ளியிலிருந்து தனது மகள்களை மொபட்டில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணை வழிமறித்து, 15 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா. இவருடைய மனைவி நம்பி செல்வி (39). இவர்களது இரண்டு மகள்களும் ஏர்வாடியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். நம்பி செல்வி தினமும் மாலை நேரத்தில் தனது மகள்களை பள்ளியிலிருந்து மொபட்டில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.
வழக்கம்போல நேற்று முன்தினம் மாலையில், பள்ளி முடிந்ததும் தனது மகள்களை மொபட்டில் ஏற்றிக்கொண்டு நம்பி செல்வி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஏர்வாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் இவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். திடீரென நம்பி செல்வியின் மொபட்டை வழிமறித்து அந்த மர்மநபர்கள் வண்டியை நிறுத்தினர்.
இதனால் நம்பி செல்வி அதிர்ச்சியடைந்து தடுமாறினார். அந்த கணத்தில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் சட்டென்று கீழே இறங்கி, நம்பி செல்வியின் கழுத்தில் கிடந்த சுமார் 15 பவுன் தங்க நகையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டார். பின்னர், தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி இருவரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலைந்த நம்பி செல்வி உடனடியாக ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர். சதீஷ் கண்ணன் மற்றும் ஏர்வாடி காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை சமயத்தில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரங்கேறியுள்ள இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.