Loading...

மதுரை மண்டலத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் 705 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகை

A

Admin

October 02, 2026 • 10:52 AM

மதுரை மண்டலத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் 705 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகை

மதுரை மண்டலத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம்
705 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகை

மதுரை, அக். 03

மகளிரின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசியப் பயணங்களுக்கு ஆதரவாக செயல்படுத்தப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம், ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி
இதன் தொடர்ச்சியாக மதுரை மண்டலத்தில் மாட்டுத்தாவணி டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., தலைமை வகித்து பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுரை மண்டலத்தில் இத்திட்டத்தின் கீழ் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் 405 சாதாரண கட்டணமில்லா நகரப் பேருந்துகள், 64 எக்ஸ்பிரஸ் பேருந்துகள், 196 டீலக்ஸ் பேருந்துகள் என 665 நகரப் பேருந்துகளும், 40 புறநகர்ப் பேருந்துகளும் என மொத்தம் 705 பேருந்துகள் மகளிருக்காக இயக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் மகளிருடன் திருநங்கைகளும் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், பயனாளிகளுக்கு வருமான உச்சவரம்போ அல்லது பயண எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வணிகம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணிக்கும் பெண்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.தங்கபாண்டி, மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் மொஹர் பதூருதீன், மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மற்றும் துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மேலாண் இயக்குநர் வி.சரவணன், பொது மேலாளர் ச.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -