36 வயதிலும் ஓயாத ஓட்டம் - இந்தியாவுக்காக மெடல்களை அள்ளும் பூவம்மா
36 வயதிலும் ஓயாத ஓட்டம் - இந்தியாவுக்காக மெடல்களை அள்ளும் பூவம்மா
1990-ஆம் ஆண்டு பிறந்த பூவம்மாவுக்கு இப்போது 36 வயது. ஆனால் வயது அவரது வேகத்துக்கு தடையாக இல்லை. 2006-ல், தனது 16-வது வயதில் இந்திய ஜெர்சியை அணிந்து சர்வதேச தடகளப் பயணத்தைத் தொடங்கிய பூவம்மா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பூவம்மா இடம்பெற்ற இந்திய அணி 3:29.69 என்ற நேரத்தில் ஓடி முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பூவம்மாவுக்கு இது மூன்றாவது தங்கம். ஏற்கனவே 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் தங்கம் வென்ற அணிகளில் இடம்பெற்றிருந்தார்.
அதுமட்டுமன்றி, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியின், ஆண்கள், பெண்கள் என கலந்து ஓடும் 4×400 மீட்டர் ஓட்டத்திலும் பூவம்மா வெள்ளிப் பதக்கம் வென்றார். 36 வது வயதில், தங்கம் உள்ளிட்ட இரட்டை மெடல்களை தடகளத்தின் ஓட்டப் பிரிவில் பெறுவது என்பது மிகப்பெரிய சாதனை!
2014 ல், பூவம்மாவுடன் இந்திய அணிக்காக ஓடியவர்கள் பிரியங்கா பன்வார், திண்டு லுகா மற்றும் மந்தீப் கவுர் , 2018 ல், ஹிமா தாஸ், சரிதாபென், வி.கே. விஸ்மயா என முற்றிலும் வேறு ஒரு செட் வீரங்கனைகளோடு பூமம்மா ஓடினார். தற்போது, கிரண் பஹல் , பிராச்சி சௌத்ரி, வித்யா ராம்ராஜ் ஆகியோருடன் ஓடி தங்கம் வென்றிருக்கிறார். ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டியின் போதும் மற்ற வீராங்கனைகளின் பெயர்கள் மாறிக்கொண்டே இருக்க, பூவம்மா மட்டும் அந்தப் பட்டியலில் நிலையாக இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறார். தன் சக வயது பெண்களோடு ஓட ஆரம்பித்தவர், இன்று தன்னைவிட பத்து வயது சிறியவர்களோடும் தங்கத்தை வெல்லும் வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்.
பூவம்மாவின் இந்தப் பயணத்தில் நெருக்கடிகளும் வராமல் இல்லை. 2021 பிப்ரவரி 18 அன்று பாட்டியாலாவில் நடந்த போட்டியின் போது பூவம்மாவின் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ஊக்கப் பொருள் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. அந்த ஊக்க மருந்தை அவர் தெரிந்தே எடுத்திருக்கவில்லை, கோவிட் டைமில் அவர் எடுத்துக்கொண்ட மருந்தின் விளைவால் தவறு நிகழ்ந்திருக்கிறது என தன் பக்க விளக்கத்தைக் கொடுத்தார்.
பின்னர் 2023-ல் மீண்டும் போட்டிக்குத் திரும்பிய அவர், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணிக்காக களமிறங்கினார். அங்கே பெரிதாக இந்திய அணி பிரகாசிக்க முடியாவிட்டாலும், அதற்கெல்லாம் சோர்வுறாமல், இன்று மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து, 36 வயதில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கத்தை வெல்வது எளிதான விஷயமா? வயது என்பது வெறும் எண் என்பதை பூவம்மா நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு பேசிய பூவம்மா, ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், நாற்பது வயது ஆனாலும்கூட தன்னால் சிறப்பாகச் செயல்பட முடியும் வரை தொடர்ந்து நாட்டிற்காக ஓட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு தடகள வீராங்கனையின் வெற்றியை ஒரு போட்டியின் முடிவு அல்லது அவர் பெற்ற பதக்கத்தின் எண்ணிக்கையால் மட்டும் அளக்க முடியாது. பல ஆண்டுகள் உச்சநிலைக்கு அருகில் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதும் மிகப்பெரிய சாதனையே. 36 வயதிலும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பாதையில் ஓடி, மீண்டும் மீண்டும் பதக்க மேடையில் நிற்கும் பூவம்மா அதற்கான ஓர் உதாரணம்.