அசைன்மென்ட் மூலம் அரசு இலவசமாகக் கொடுத்த இடங்களில் பிளாட் போடக்கூடாது. சிவகங்கை விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை:
அசைன்மென்ட் மூலம் அரசு இலவசமாகக் கொடுத்த இடங்களில் பிளாட் போடக்கூடாது. சிவகங்கை விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை: சிவகங்கை:அக்:29 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் ஜேபிகிரேசியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மானாமதுரை விவசாயி கிருஷ்ணன் தேவர் பேசும்போது: மானாமதுரை தாலுகா செய்களத்தூர் பிர்காவில் உள்ள கேகே பள்ளம், மாங்குளம், சூரக்குளம் ஆகிய ஊர்களில் அரசு மூலம் விவசாயிகளுக்கு அசைன்மென்ட் மூலம் இனமாகக் கொடுத்த நிலங்கள் அதிகளவில் உள்ளது. இந்த இடங்களை சில தனியார்கள் விலைக்கு வாங்கி அவற்றை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இப்படி தனிப்பட்ட நபர்கள் பிளாட் போடுவதால் மேய்ச்சல் நிலங்கள் குறைவாகிவிட்டன. மேலும் கண்மாய்வரத்துக் கால்வாய்களும் அழிந்து கண்மாய்க்கு தண்ணீர் வரத்தும் குறைந்துவிட்டது. எனவே அரசு அசைன்மென்ட் நிலங்களில் பிளாட் போடுவதை நிறுத்த அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே போடப்பட்ட பிளாட்டுகளின் அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என்றார். திருப்புவனம் சேங்கைமாறன் பேசும்போது: சிவகங்கை மாவட்டத்தில் பால்வளத் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் நான் சமூகப் பணிகள் செய்து வருகிறேன். குறிப்பாக சிவகங்கை மாவட்ட ஆவின் நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. பால் ஆவினுக்கு வந்து சேர்வது பாதிக்குப் பாதியாக குறைந்துவிட்டது. காரணம் உறுப்பினர்கள் பாலை தனியாரிடம் விற்பது தான் காரணம். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார். கோபால் என்ற விவசாயி பேசும்போது திருப்புவனம் யூனியன் பகுதியில் அடங்கிய பனையனேந்தல் உலகனேந்தல் கண்மாய்கள் நீண்ட ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. எனது நீண்ட நாள் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார். இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகளை விரைந்து முடிக்க கோட்டாட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த விவசாயிகள் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து துறை, இவற்றில் பொறுப்பான அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனவும் இதே போல் இணை இயக்குனர் (விவசாயம் ) அவர்களும் பங்கேற்கவில்லை என விவசாயிகள் குறை கூறினார்கள்.