அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நுழைவாயிலில் உள்ள இந்தி எழுத்துகளை அகற்ற வேண்டும்
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நுழைவாயிலில் உள்ள இந்தி எழுத்துகளை அகற்ற வேண்டும்!
15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் தமிழ்க் காப்போம் கூட்டமைப்பு மனு!
மதுரை, அக்டோபர் 14
மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயில் நுழைவாயிலில் உள்ள பெயர்ப் பலகையில் இடம்பெற்றுள்ள இந்தி எழுத்துகளை அகற்றி, தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கைக்கு ஏற்ப மட்டுமே தகவல்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்க் காப்போம் கூட்டமைப்பின் சார்பில் இன்று அழகர்கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதாகரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணை மற்றும் வழிகாட்டுதல்கள் ஏற்ப பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் ஆன்மிக மரபுகளுடன் நெருங்கிய தொடர்புடைய பழமையான திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் நுழைவாயிலில் புதிதாக இந்தி எழுத்துகள் இடம்பெற்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், நுழைவாயிலில் உள்ள பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துகள் போதிய அளவில் பெரிதாகவும் தெளிவாகவும் தெரியாத வகையில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர், தமிழ் மொழிக்கு முதன்மையான இடமும் உரிய முக்கியத்துவமும் அளிக்கும் வகையில் பெயர்ப் பலகையை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோயில் நுழைவாயிலில் இடம்பெற்றுள்ள இந்தி எழுத்துகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெயர் பலகையில் தமிழை உயர்த்தி பிடிக்க மனு கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மனுதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் இணை ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழ் மொழியின் உரிமையையும் தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையையும் பாதுகாக்கும் நோக்கில் அடுத்தகட்டப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்பு!
இந்தக் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்விற்கு தமிழ்த் தேச குடியரசு இயக்கத்தின் மெய்யப்பன் மற்றும் டங்ஸ்டன் திட்டம் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராசு ஏற்பாடு செய்திருந்தனர்.
மக்கள் தமிழகம் கட்சியின் நிறுவனர் நிலவழகன், திராவிட விடுதலைக் கழகத்தின் மணியமுதன், மகளிர் ஆயத்தின் அருணா, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் நிவேதா, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் பகத்சிங், யானைமலை ஒத்தக்கடை நண்பர்கள் அமைப்பின் காளிமுத்து, ஆதித்தமிழர் கட்சியின் விடுதலைக்குமரன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கருப்பையா, தமிழர் முற்போக்குக் கழகத்தின் வினித் வாசு, ஆதித்தமிழர் பேரவையின் செல்வம், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் சந்துரு, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொன் குமரன், நாம் தமிழர் கட்சியின் கனகராஜ், வேந்தன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.