இளையான்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து போராட்டம்.
இளையான்குடி அருகே
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து போராட்டம்.
சிவகங்கை:அக்:16
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்துள்ளது திருவள்ளூர். இந்தக் கிராமத்தில் சவுரியம்மாள் மற்றும் பெரியகருப்பி ஆகியோர் வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்தப் பெண்கள் மீது திடீரென இடி மின்னல் தாக்கி அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடல் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்தவர்களின் உறவினர்கள் , திருவள்ளூர் கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சேர்ந்து மருத்துவமனையின் நுழைவாயிலில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் இறந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் . அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் இளையான்குடி வட்டாட்சியர் நாகநந்தினி, சிவகங்கை வட்டாட்சியர் ராஜலெட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.