Loading...

காந்தி ஜெயந்தி விழா: கதர் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

A

Admin

October 02, 2026 • 10:53 AM

காந்தி ஜெயந்தி விழா: கதர் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

காந்தி ஜெயந்தி விழா: கதர் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்


மதுரை, அக். 03

அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள காதி கிராஃப்ட் விற்பனை நிலையத்தில் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், கதர் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையும் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் மொஹர் பதூருதீன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை, மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மற்றும் துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், இ.ஆ.ப., உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வாதாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் வாரியத்தின் கீழ் உசிலம்பட்டி வட்டம் அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம், உசிலம்பட்டியில் கதர் உபகிளை மற்றும் மதுரை மேலமாசி வீதியில் கதர் அங்காடி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.


அன்னமார்பட்டி கிராமிய நூற்பு நிலையத்தில் 12 ராட்டைகளும், உசிலம்பட்டி கதர் உபகிளையில் 11 தறிகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வருகிறது.


மதுரை மாவட்ட கதர் அங்காடிகள் மூலம் கடந்த ஆண்டு கதர் ரகங்களுக்கான விற்பனை இலக்கு ரூ.1.05 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.68.32 லட்சம் விற்பனை நடைபெற்றது. கிராமப் பொருட்களுக்கு ரூ.40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.35.16 லட்சம் விற்பனை செய்யப்பட்டது.


மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையாக 2025–26ஆம் ஆண்டில் 316 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.15.80 லட்சம் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.


காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதில் கதர் பொருட்களை வாங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த விற்பனை நிலையங்களில் அசல் வெள்ளி வரிசை பட்டுச் சேலைகள், கதர் வேட்டிகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், மெத்தை, தலையணைகள், கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர் மற்றும் கம்பளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அக்மார்க் சான்று பெற்ற தூய்மையான தேன், குளியல் சோப்புகள், சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனை வெல்லம் உள்ளிட்ட கிராமப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.


மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் வரையும், கம்பளி ரகங்களுக்கு 20 சதவீதம் வரையும் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் வசதிக்காக 10 மாத சம தவணைகளில் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வகையில் கடன் விற்பனை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்காக ரூ.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடியும் வரை அனைத்து கதர் அங்காடிகளும் விடுமுறையின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கதர் ரகங்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய மதுரை உதவி இயக்குநர் இரா.பாலமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -