சுடுகாட்டு நில விவகாரம் : கிராம மக்கள் மண்ணெண்ணெய் ஊற்றி சடலங்கள் புதைக்கப்பட்ட குழிகள் மீது அமர்ந்து தர்ணா
சுடுகாட்டு நில விவகாரம் : கிராம மக்கள் மண்ணெண்ணெய் ஊற்றி சடலங்கள் புதைக்கப்பட்ட குழிகள் மீது அமர்ந்து தர்ணா
போச்சம்பள்ளி அக் :15
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சுடுகாட்டு நில விவகாரத்தில், வருவாய்த்துறையினர் நிலத்தை அளக்க முற்பட்டபோது, புதைக்கப்பட்ட சடலங்களின் குழிகள் மீது அமர்ந்து கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மலையாண்டஹள்ளி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள், இறந்தவர்களது உடல்களை ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள ஏரிக்கரையின் ஓரத்தில் கடந்த சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக அடக்கம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாகக் கூறி, ராஜாவின் மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நிலத்தை அளந்து காட்டி, எல்லைக் கற்கள் நட நீதிமன்றமும் உத்தரவிட்டது.
பொதுமக்கள் வாக்குவாதம் இன்று போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் தலைமையில், மத்தூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில் 50 இருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு திரண்ட மலையாண்டஹள்ளி கிராம மக்கள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடல்களை அடக்கம் செய்யும் இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடம் என்றும், 'யு.டி.ஆர்' பதிவேட்டின் போது இந்த இடத்தைப் பெயர் மாற்றம் செய்து மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் கிராமத்தினர் குற்றம் சாட்டினர்.
கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி வருவாய்த்துறையினர் நிலத்தை அளவிடும் பணியைத் தொடர்ந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதுடன், ஏற்கனவே புதைக்கப்பட்ட சடலங்களின் குழிகள் மீது அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதால், போச்சம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் அவசரமாகக் கலந்து ஆலோசித்தனர்.
அதனைத் தொடர்ந்து, விரைவில் இருதரப்பையும் அழைத்து "அமைதிக் குழு பேச்சுவார்த்தை" நடத்தப்படும் என்றும், இருதரப்பு ஆவணங்களையும் சரிபார்த்து அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கிருந்து திரும்பினர். இறந்தவர்களின் சுடுகாட்டு நிலத்திற்காகப் பொதுமக்கள் சடலங்கள் மீது அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.