செட்டிகுளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் அரசுத் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே கிராம சபையின் நோக்கம்
செட்டிகுளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம்
அரசுத் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே கிராம சபையின் நோக்கம்
மதுரை, அக்.03
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில் சிறப்பு காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு முன்னதாக மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வேளாண்மைத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செட்டிகுளம் ஊராட்சியின் வளங்கள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP) வள வரைபடம் மற்றும் சமூக வரைபடக் கோலங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பாராட்டினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மையே சேவை, சுகாதாரம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர்.
கிராம சபை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களைத் தேர்வு செய்வதற்கும், தங்களது அடிப்படைத் தேவைகளை வெளிப்படையாக எடுத்துரைப்பதற்கும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான ஜனநாயக மேடையாக கிராம சபை விளங்குகிறது என்றார்.
குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், கல்வி, சுகாதாரம், ஊரக உட்கட்டமைப்பு உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் தகுதியான அடித்தட்டு மக்களை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதே கிராம சபை கூட்டங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்களில் பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று பங்களிக்க வேண்டும் என்றும், பொது சுகாதாரத்தைப் பேணுவதிலும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறினார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரைவான கள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் செட்டிகுளம் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருள்கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.
ஊராட்சியைத் தூய்மையாக பராமரிக்கவும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் களத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களை மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டினார்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இரண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான சமுதாய முதலீட்டு நிதி காசோலைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.சதீஷ்பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை–வடக்கு) விசாலாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.