சேலம் மாநகராட்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சேலம் மாநகராட்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சேலம்: செப்26
சேலம் மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை, பூஜ்ஜிய மதிப்பீட்டில் குப்பை மேலாண்மை மற்றும் கழிவுகளைப் பயன்படுத்தும் நிறுவனத்திற்கு இலவசமாக ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட்டு, சேலம் மாநகராட்சியின் நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாநகரில் செட்டிச்சாவடி, கிச்சிப்பாளையம், வாய்க்கால்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குப்பைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்டத்தால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சியால் ஏற்கனவே கைவிடப்பட்டதாக கூறப்படும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்ற விவகாரத்தில் நடவடிக்கை கோரி வலியுறுத்தல்
கடந்த 28.08.2026 அன்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், உறுப்பினர் சாரதாதேவி தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்துவதில் தடையாக இருப்பதாக கூறப்படும் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் விவகாரம் – போராட்டம் அறிவிப்பு
சேலம் வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் சுமார் ரூ.35 கோடி மதிப்பிலான ஏலம் தொடர்பாக தனிநபர் ஒருவர் ஏமாற்றியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோரக் கடைகள் தொடர்பான ஒப்பந்த நடவடிக்கைகளிலும் முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையாக நடைபெற வேண்டிய ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்ததாக கூறப்படும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மாநகர மக்களின் நலனுக்காக வேறு வழியில்லாததால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தற்போது 83 வயதாகும் நிலையில், பொதுமக்களுக்காக இந்த போராட்டத்தை மேற்கொள்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.