சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு!
சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு!
புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீர் கால்வாய்கள், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
சேலம், அக். 15:
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு. யஷ்வந்த் ஆதித்யா நீலம், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.10.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சூரமங்கலம் மண்டலம், கோட்டம் எண் 26-இல் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்காமல் சாக்கடைக் கால்வாய்களில் சீராகச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை முறையாகத் தூர்வாரி, சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிக்குமாறு சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். தாய்மார்கள் பாலூட்டும் அறை தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா என்றும், வாகன நிறுத்துமிடங்களில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் மற்றும் அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் மற்றும் நடைபாதைகள் அனைத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கோட்டம் எண் 26-க்கு உட்பட்ட பஞ்சநாதன் தெரு, குப்தா நகர் 1 முதல் 7-வது தெருக்கள், அதிசக்தி உறை மெயின் ரோடு மற்றும் அதன் 1, 2, 3-வது தெருக்கள், அண்ணா நகர் மெயின் ரோடு மற்றும் அண்ணா நகர் 1 முதல் 4-வது தெருக்கள் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று நான்கு வகையான குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகளையும், சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் மருத்துவர் சி. ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.