தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடக்கம்
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடக்கம் : மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்!
செப் 29
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை இராசாசி அரசு மருத்துவமனையிலிருந்து தமிழ்நாடு முழுவதும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை" காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கி சிறப்பித்தார்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்தல் மற்றும் தாய்-சேய் நலனைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22, 2026 முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் இத்திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் விதமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலிருந்து மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எடுத்துச்சென்று, அங்கு பிரசவிக்கும் தாய்மார்களுக்கு வழங்கும் வகையில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வட்டார வாரியாக தங்க மோதிரம் பெறும் குழந்தைகள் விவரம்
பெரியகுளம் வட்டாரம் 429 குழந்தைகள்
தேனி வட்டாரம் 376 குழந்தைகள்
ஆண்டிபட்டி வட்டாரம்: 340 குழந்தைகள்
கம்பம் வட்டாரம்: 338 குழந்தைகள்
போடிநாயக்கனூர் வட்டாரம்: 325 குழந்தைகள்
உத்தமபாளையம் வட்டாரம் 282 குழந்தைகள்
சின்னமனூர் வட்டாரம்: 268 குழந்தைகள்
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வட்டாரம்: 185 குழந்தைகள்
தேனி மாவட்டத்தில் மொத்தம் 2,543 குழந்தைகளுக்கு முதற்கட்டமாக இத்தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நாளிலேயே 1 கிராம் தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்படுவார்கள்.
பயனாளிகளின் நெகிழ்ச்சி
ராமுத்தாய் ராசி (பெரியகுளம் வடகரை)
"எனக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 'மகிழினி' என்ற பெண் குழந்தை பிறந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க என் குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தை தந்த மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்."
கீர்த்தனா (பெரியகுளம் வடகரை):
"கடந்த ஜூன் மாதம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிறந்த என் பெண் குழந்தை 'ரிதன்யா'-விற்கு தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இந்நிகழ்வில் பெரியகுளம் சார் ஆட்சியர் தவலேந்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வரதராஜன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் (பொ) அன்புச்செழியன், மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.குமார் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.