தேனி மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா: 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து!
தேனி மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா: 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து!
செப் 26
தேனி மாவட்டம், சின்னமனூர் RMS மாயாண்டி வேலம்மாள் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் வளைகாப்பு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் நலனுக்கென பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கர்ப்ப காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும், 6 மாதத்திலிருந்து 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.
தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியம், குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கர்ப்பத்தின் 16-ஆவது வாரத்திலிருந்து குழந்தைகள் கேட்கும் திறன் பெறுவதால், நாம் என்ன பேசுகிறோம் என்பதை குழந்தைகள் நன்கு கேட்கும். எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் விதமான உரையாடல்களைக் கேட்கவும், பேசவும் வேண்டும். அதேபோல், பிரசவிக்கும் வரை பதற்றமோ, கோபமோ இல்லாமல் தனது உடல்நலனைப் பாதுகாப்பதுடன், அவ்வப்போது சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.
பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்தும், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்தும், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்தும், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் தேனி மாவட்டத்தில் 9 வட்டாரங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இன்றையதினம் சின்னமனூர், உத்தமபாளையம் மற்றும் கம்பம் ஆகிய வட்டாரத்தைச் சேர்ந்த தலா 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு, சேலை, வளையல், மஞ்சள் குங்குமம், பழங்கள் போன்றவற்றை தாம்பூலத்தட்டில் வைத்து, சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டதுடன், சக்கரைப்பொங்கல், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் புளி சாதம் உள்ளிட்ட ஐந்து வகையான கலவை சாதங்களும் பரிமாறப்பட்டது.
இவ்விழாவில் ஊட்டச்சத்துக் கண்காட்சி அமைக்கப்பட்டு காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், வளர்ச்சி தரும் உணவுகள், சக்தி தரும் உணவுகள், இரும்புச் சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள், அயோடின் சத்து நிறைந்த உணவு வகைகள் மற்றும் எடை ஆய்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஊட்டச்சத்து நலக்கல்வி, கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய உணவு வகைகள், எடை அதிகரிப்பின் விளக்கங்கள், இரும்புச்சத்து மாத்திரை உட்கொள்ளுவதன் அவசியம் குறித்து மருத்துவ அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, உத்தமபாளையம் வட்டாட்சியர் பாலசண்முகம், சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.