பா.ஜ.க. தலைவர் எச்.ராஜா 71-வது பிறந்த நாள் விழா: திண்டுக்கல்லில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் - அன்னதானம் வழங்கல்
பா.ஜ.க. தலைவர் எச்.ராஜா 71-வது பிறந்த நாள் விழா: திண்டுக்கல்லில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் - அன்னதானம் வழங்கல்!
திண்டுக்கல், செப்.29-
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளரும், தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எச்.ராஜாவின் 71-வது பிறந்த நாளையொட்டி திண்டுக்கல்லில் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.அய்யப்பன் கவுண்டர் மற்றும் பழனி கோதைமங்கலத்தைச் சேர்ந்த டி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலமாக வந்த பக்தர்கள் மேட்டுராஜாக்காப்பட்டியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வந்தடைந்தனர்.
அங்கு எச்.ராஜா நோய் நொடியின்றி பூரண ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நூறாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் எச்.ராஜா நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து நேர்த்திக்கடனாக 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் தரையில் அமர்ந்து மண் கலந்த சோற்றை சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கோவில் பிரகாரத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.