பெரியகுளம் அருகே பரிதாப நிலை: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
பெரியகுளம் அருகே பரிதாப நிலை: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை!
அக் 21
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊர் ஊராகத் திரிந்து வரும் கருப்பையா என்ற முதியவரின் தற்போதைய அவல நிலை காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது.அவல நிலையில் தவிக்கும் முதியவர்:
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள கருப்பையா எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியாமல், நீண்ட நாட்களாக முறையான பராமரிப்பு இன்றி அடர்ந்த முடி மற்றும் தாடியுடன் காணப்படுகிறார். குளிக்கக் கூட வழியின்றி, ஒரு சாக்கு பையைத் துணையாக வைத்துக்கொண்டு, ஒரு வேளை உணவுக்காகத் தெருத்தெருவாகவும் ஊரூராகவும் அலையும் இவரது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
குளிர்கால நெருக்கடியும் மக்களின் வேதனையும்:
தற்போது குளிர் காலமும் நெருங்கி வரும் நிலையில், கடும் குளிரில் தங்குவதற்கு முறையான இடமின்றி, சரியான உணவு கூட கிடைக்காமல் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கும் உடல்நலக் குறைவுக்கும் ஆளாகி வருகிறார்.
உடனடி நடவடிக்கை கோரும் சமூக ஆர்வலர்கள்:
தொடர்ந்து மோசமடைந்து வரும் இவரது நிலையைக்கண்டு இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாகத் தாமாக முன்வந்து நேரில் ஆய்வு செய்து, கருப்பையாவை மீட்டு அரசுத் துறை சார்ந்த காப்பகத்திலோ அல்லது மருத்துவமனையிலோ சேர்த்து முறையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.