மகளிர் குழுக்களை உயிர்ப்பிக்க நடவடிக்கை அமைச்சர் நிர்மல் குமார்
மகளிர் குழுக்களை உயிர்ப்பிக்க நடவடிக்கை
அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை,நவ 5
மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் தொழில் முனைவோருக்கு வங்கி நிதி இணைப்பு ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு, 14,649 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.137.01 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி சரிவர சென்றடையவில்லை. இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர். அதனை சரிசெய்து மீண்டும் மகளிர் குழுக்களை உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏ முஸ்தபா தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கூறியது குறித்து கேட்கிறீர்கள். பொதுத் தேர்தல் முடிவு வெளியானதில் இருந்தே அதிமுக, திமுக தரப்பில் இருந்து தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது தொடர்கிறது. இதுதொடர்பாக கரூரை சேர்ந்த முக்கிய நபர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தற்போது பெரிய அளவில் முடுக்கி விட்டுள்ளனர். அதனால்தான் தவெக அரசு சில மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகின்றனர்.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க முயல்கின்றனர். கடந்த இடைத்தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டனர். இதற்கு திமுகவில் கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இதேபோல வரும் இடைத்தேர்தலிலும் திமுக, அதிமுக இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தனர். அதற்கும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது. தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக தொடர்ந்து முயல்கிறது. ஏனெனில் அவர்களிடம் லட்சக்கணக்கான கோடி பணம் உள்ளது.
அமைச்சர் விஸ்வநாதன் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறியது குறித்தும், அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையா என்றும் கேட்கிறீர்கள். இந்த நிலை யாரால் ஏற்பட்டது. ஒவ்வொரு எம்எல்ஏவையும் தொடர்புகொண்டு, அவர்களை விலைக்கு வாங்குவதற்கு ஆள் நியமித்து பேரம் பேசுகின்றனர். ரூ.60 கோடி, ரூ.70 கோடி என பேரம் பேசுகின்றனர். திமுகவால்தான் இதுபோன்ற பிரச்னை வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்தது குறித்து கேட்கிறீர்கள். பாஜக, அதிமுக, திமுக ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்துதான் இதைச் செய்கின்றன. எங்கள் தலைவரும், நாங்களும் எதையும், எப்போதும், எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளோம். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றிபெறும். கடந்த 6 மாதங்களில் அனைத்து துறைகளிலும் மாற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறையில் சீரமைப்பு பணிக்கு முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிறைகளில் ஆங்கேங்கே நிகழும் தகாத சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிர்வாகத்தை சீரமைக்கும்போது பிரச்னை ஏற்படுவது இயல்பானதே. ஒரு மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலை வாங்கியது எத்தனை ஆண்டுகால பிரச்னை? ஒரு நாளில் சுமார் ரூ.150 கோடி வருவாய் உள்ள நிலையில் அதில் ரூ.10 கோடி முறைகேடாக செல்கிறது. இதை தடுக்க முயற்சிக்கும்போது எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இது 23 ஆண்டுகளாக நீடித்த நடைமுறை. இந்த பிரச்னைகளை கடந்து சீரமைப்பு மேற்கொள்ளப்படும்.
மின்துறையிலும் அதிக பிரச்னைகள் இருந்தது. நேற்று முதல் யாருக்கும் தெரிவிக்காமல் மின்தடை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி சில துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தேவையற்ற காரணங்களுக்காக மின்தடை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.