ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழுதூர் விலக்கு அருகே 30 நாட்களாக தேங்கிய மழை நீரால் தொற்றுநோய் அபாயம் பீதியில் 8 கிராம மக்கள்!
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழுதூர் விலக்கு அருகே 30 நாட்களாக தேங்கிய மழை நீரால் தொற்றுநோய் அபாயம் பீதியில் 8 கிராம மக்கள்! ராமநாதபுரம், நவ. 2- ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி அருகே 30 நாட்களாக மழை நீர் தேங்கி அப்புறப்படுத்தாமல் இருப்பதால் எட்டுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் உள்ளனர். ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே வழுதூர் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பாதையில் கடந்த 30 தினங்களாக மழைநீர் தேங்கி தெப்பம் போல் காட்சியளிக்கிறது. இதில் தற்போது டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி அதனுடன் பல்வேறு விஷ ஜந்துக்களும் இங்கு உருவாகி இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு தொற்று நோய்களை பரப்பி வருகிறது. இந்த மழை நீரை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறையோ உள்ளாட்சி நிர்வாகமோ உரிய நடவடிக்கை இதுவரை எடுக்காததால் இப்பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் நோய்க்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தொற்றுநோய் மேலும் பலருக்கும் பரவுவதை தடுக்கவும் தவிர்க்கவும் இங்கு தேங்கியுள்ள மழை நீரை துரிதமாக அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மழை நீர் தற்போது நோய் பரப்பும் கேந்திரமாக மாறி உள்ளதால் இங்கிருந்து அருகிலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நோயை பரப்பும் அபாயம்உள்ளதால் துரிதமாக செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.