பாதியிலேயே கைவிடப்பட்ட சாக்கடை கால்வாய் பணிகள்– நோய் பரவும் அபாயம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பாதியிலேயே கைவிடப்பட்ட சாக்கடை கால்வாய் பணிகள்– நோய் பரவும் அபாயம்
விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பாலக்கோடு அக் 12
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டின் நுழைவுப் பகுதி மற்றும் பைபாஸ் பிரிவு சாலை அருகே சாக்கடை கால்வாயைச் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கப்பட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதுடன், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
மேலும்
பாலக்கோடு தக்காளி மார்க்கெட், வணிக நிறுவனங்கள், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் டாஸ்மாக் கடை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்தப் பிரச்சினை நிலவி வருகிறது.
தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள், மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வந்து செல்லும் இப்பகுதியில், சாக்கடை கால்வாய் பணிகள் முழுமையடையாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பல தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில்
ஒருபுறம் கழிவுநீர் தேக்கம், மறுபுறம் திறந்த நிலையில் உள்ள கால்வாய் இந்த சூழலில், அப்பகுதி வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது.
இருசக்கர வாகனங்கள் கால்வாயில் விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்
மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையோரத்தில் கால்வாய் பணிகள் முழுமையடையாமல் இருப்பது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டும், அவை முழுமையாக நிறைவு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, திறந்த கால்வாயால் ஏற்படும் விபத்து அபாயத்தைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் தக்காளி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.