மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை அழகை ரசிக்கும் 'விஸ்டாடோம்' ரயில்
மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை அழகை ரசிக்கும் 'விஸ்டாடோம்' ரயில்
மதுரை அக் 23
மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை அழகை ரசிக்கும் 'விஸ்டாடோம்' ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி மேற்கூரை கொண்ட 'விஸ்டாடோம்' ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. பயணிகளும் ஆர்வமுடன் இந்த ரயிலில் பயணம் செய்ய வருகை தந்துள்ளனர். இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மேயர் பொறுப்பு நாகராஜன் ஆகியோர் இனிப்பு வழங்கினர்
மதுரை - புனலூர் - கொல்லம் ரயில் பாதை எழில்மிகு இயற்கை அழகு நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலை வழியாக செல்கிறது. இந்தப் பகுதியில் இயற்கை அழகு ரசிக்கும் வகையில் மதுரை - குருவாயூர் - மதுரை ரயில்களில் (16327/16328) அக்டோபர் 23 முதல் ஜனவரி 16 வரை அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி மேற்கூரை கொண்ட 'விஸ்டாடோம்' ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மதுரையில் இருந்து புறப்படும் குருவாயூர் ரயிலில் வியாழன், வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும், குருவாயூரிலிருந்து புறப்படும் மதுரை ரயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளிலும் இயங்கும்.
இந்த ரயில் பெட்டிக்கான பயண சீட்டு முன்பதிவு துவங்கியவுடன் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பொதுவாக 60 நாட்கள் வரை ரயில் பயண சீட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்
டிசம்பர் 20 வரை இந்த ரயில் பெட்டிக்கு பயண சீட்டு பதிவு காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் பெட்டியில் பயணம் செய்து கொண்டே மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த மலைகள் பசுமை, பள்ளத்தாக்குகள், நீர் வீழ்ச்சிகள் ஆகியவற்றை ஒரு அகன்ற காட்சியாக பார்க்க முடியும்.
இந்த ரயிலானது ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை காட்சிகளை ரசிக்க முடியும்.
இந்த ரயில் பெட்டிக்கான பயணச்சீட்டுகளை ஜனவரி 16 வரை பதிவு செய்ய முன்பதிவிற்கான 60 நாள் கணக்கில் தினந்தோறும் முயற்சிக்கலாம். இந்தப் பெட்டியில் பயணம் செய்ய மதுரையில் இருந்து புனலூருக்கு கட்டணம் ரூபாய் 1010 -ம், மதுரையில் இருந்து கொல்லத்தரத்திற்கு ரூபாய் 1140 -ம் , மதுரையில் இருந்து குருவாயூருக்கு ரூபாய் 1875 -ம் வசூலிக்கப்படுகிறது.